புதன், 28 மே, 2014

கல்முனை மாநகர சபையில் மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை!!


இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று மாலை சபை மண்டபத்தில் மேயர் எம். நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது. இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடிகக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், சபை எதிர்க்கட்சித்
தலைவருமான அ.அமிர்தலிங்கம் முன்மொழிந்தார். இதனை ஏற்றுக்கொண்ட மேயர் நிஸாம் காரியப்பர், குறித்த நல்வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணையை உறுப்பினர்கள் சகலரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதுடன் இதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாகவும் அறிவித்தார். மேயர் நிஸாம் காரியப்பர் இப்பிரேரணை மீது உரையாற்றுகையில், "பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் எமது அண்டை நாடான இந்தியாவில் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார்.

அவருடைய இந்த வரவு இப்பிராந்தியத்திலுள்ள சகல நாடுகளிலும் வித்தியாசமான எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது வரவு மற்றவர்களுக்கு எப்படியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்கள் மத்தியில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதிலும் தனிப்பெரும்பான்மையுடன் இந்தியப் பிரதமராக வந்துள்ள மோடி, பிராந்திய விடயங்களில் தீர்க்கமாக நடப்பதுடன், இலங்கை பிரச்சினை தொடர்பிலும் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதேவேளை, வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ள சுஷ்மா சுவராஜ் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் நல்ல தெளிவுள்ளவரென்பதும் குறிப்பிட்டுந் சொல்லக்கூடியவிடயம்" - என்றார். இந்தியத் தூதரகம் மூலம் மோடிக்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக