சனி, 3 மே, 2014

துணைவேந்தருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: மீண்டும் இழுத்து மூடப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகம்!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தருக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த போரட்டத்தை தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21-ம் திகதி வளாகத்தில் தமிழ்- சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் நடந்த மோதல் சம்பவமொன்றின் எதிரொலியாக ஏற்கனவே மறு அறிவித்தல் வரை வந்தாறுமூலை வளாகம் மூடப்பட்டு
மீண்டும் கடந்த 28-ம் திகதி திறக்கப்பட்டது.

பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் முதலாம் மற்றும் இறுதி ஆண்டுகளுக்கான விரிவுரைகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய ஆண்டுகளுக்கான விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மாணவர்களால் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சனையின் எதிரொலியாக மாணவர் பேரவை கலைக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் அரசியல் ரீதியாகச் செயற்படுகிறார் என்றும் தம்மை பழி வாங்க முற்படுகிறார் எனவும் தெரிவித்த மாணவர்கள் துணைவேந்தரை மாற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னாள் மாணவ பேரவை தலைவர்கள் 4 பேருக்கு விரிவுரைகளுக்கு செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்இ கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் வெளியில் நின்று எனக்கெதிராக கூச்சல்போட்டனர். பின்னர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். 

பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்களை மீறிய மூன்று மாணவர்களுக்கு இன்று வகுப்பு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான விசாரணை முடியும்வரையில் இந்த வகுப்புத்தடை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மீதான விசாரணைகள் முடிந்து அவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் வரையிலும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாகவும் குறிர்ரிட்டார்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் இன்று விடுதியை விட்டு வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக