சங்கானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒவர் தலை சிதறிப் பலியானார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. ஒழுங்கையில் இருந்து வந்து பிரதான வீதியில் ஏறிய மோட்டார் சைக்கிளை கன்ரர் வாகனம் மோதி சுமார் எழுபத்தைந்தடி தூரம் வரையில் இழுத்துச் சென்றதில் இளைஞர் உயிரிழந்தார். காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்
வசிகரன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த விபத்தில் கொல்லப்பட்டவர் தனது உறவினருடைய திருமணத்திற்காக கொழும்பில் இருந்து இன்றுதான் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் மானிப்பாய் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த விபத்தை படம் எடுக்கச்சென்ற ஊடகவியலர்களை அந்த இடத்தில் படம் எடுக்கவிடாது மானிப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியினால் விரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. கன்ரர் வாகனம் உரிய இடத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளும் சடலமும் கிடந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் படம் எடுக்க முற்பட்ட வேளை தடுத்து விரட்டப்பட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக