புதன், 21 மே, 2014

42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு .....!!!!!

அகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை.

ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அந்தக் குட்டியானையின் உடல் இப்போது லண்டனிலுள்ள இயற்கை உயிரின
அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சைபீரியாவில் பனிப்பகுதிகளில் அலைந்து திரியும் மான்களை மேய்க்கும் ஒருவரால் இந்த யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது 50 கிலோ எடையும் 130 செ மீ உயரமும் இருக்கிறது.

அவர் அந்த யானைச் உடலுக்கு ல்யூபா என்று பெயரிட்டுள்ளார்.

எவ்விதமான சேதமும் இல்லாமல் இந்த யானைக் குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதும் அதை பார்ப்பதும் நம்ப முடியாத ஒரு அனுபவம் என்கிறார் யானைகள் பற்றிய ஆய்வு அறிஞர் பேராசிரியர் அட்ரியன் லிஸ்டர் கூறுகிறார்.

ஒரு பெட்டியில் வைத்து லண்டன் கொண்டுவரப்ப்பட்ட அந்த உடல் நேற்று- திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது.

பெட்டியைத் திறந்தபோது அந்தப் பெண் யானைக்குட்டியின் உடல் கிட்டத்தட்ட முழுமையாக இருந்தது மிகவும் ஆச்சரியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அந்த யானைக்குட்டியில் பால் தந்தங்கள் வெளியே தெரியவில்லை என்றும், அதன் தும்பிக்கை பட்டையாக இருக்கிறது என்றும் பேராசிரியர் லிஸ்டர் கூறுகிறார்.

அதன் காரணமாக பனி படலங்கள் கீழேயுள்ள நீரை உறிஞ்சிக் குடிக்க வசதியாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

அந்த உடலில் இருக்கும் ஒரே குறை அதனுடைய வால் பகுதியை வேறு விலங்குகள் கடித்து தின்றுள்ளதுதான்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பனிப்படலத்தின் கீழே அந்த உடல் இருந்துள்ளதால், மேலே இருந்த பனிக்கட்டிகளின் எடை தாங்காமல் அது சிறிது சுருங்கி, அதாவது காற்று வெளியேறிய பலூனை போலக் காணப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.

அந்த மாமத யானையை சதைகளுடன் முப்பரிமாணத்தில் பார்ப்பது முற்றாக அசாதாரணமானது என்று கூறும் பேராசிரியர் லிஸ்டர் இந்த யானைக்குட்டி 42,000 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம் என்கிறார்.

மிக மிக அபூர்வமான இந்த யானைக் குட்டியின் உடலை பார்ப்போர் நெகிழ்ந்து போவார்கள் என்கிறார் பேராசிரியர் அட்ரியன் லிஸ்டர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக