திங்கள், 15 நவம்பர், 2010

ஈ.பி.டி.பியினர் மற்றும் கடற்படையினர் எனது கணவனைக் கடத்திச் சென்றார்கள்-மனைவி சாட்சியமளிப்பு..!

ஈ.பி.டி.பியினர் மற்றும் கடற்படையினர் எமது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிவிட்டு எனது கணவனைக் கடத்திச் சென்றார்கள் என கடத்தப்பட்டவரின் மனைவியான ம.மேரிமக்ரெலின் சாட்சிமளித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று வேலணை மண்கும்பான் பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு சாட்சியம் அளித்த மேரி மக்ரெலின் மேலும் கூறியதாவது, 2006ம் ஆண்டு ஒகஸ்ட் 17ம் திகதி இரவு 9.45மணியளவில் வீட்டுக்கு வந்தவர்கள் எனது கணவரை மக்சி என்று பெயர் கூறி அழைத்தார்கள் பின்னர் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தார்கள். அவர்கள் உள்ளே வந்தபோது வெளியில் சிலர் தமிழில் உரையாடிக் கொண்டிருப்பது எனக்குக் கேட்டது. உள்ளே வந்தவர்கள் நெற்றியில் துவக்கை வைத்து மிரட்டி எங்களை அறைக்குள் பூட்டி வைத்து விட்டார்கள். அதன் பின்பு எனது கணவனை கடத்திச் சென்றார்கள். வெளியில் நின்ற எனது அக்கா தடுத்தபோது தள்ளிவிட்டுச் சென்றார்கள். கடத்திச் சென்றவர்களின் முகங்கள் எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார். அதன் பின்னர் சாட்சியமளித்த பெண்மணி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனது மகனை (அனுராஜ்) 2007 ஒக்ரோபர் மாதம் 2ம் திகதி வீட்டில் வந்து வெள்ளைவானில் கடத்திச் சென்றார்கள். பின்னர் குறிப்பிட்ட தொகை பணம் செலுத்தப்பட்ட பின்னர் அவரை எனக்குக் காட்டினார்கள். அவர் வயாவிளான் இராணுவ முகாமில் இருப்பதாக கண்டவர்கள் சொன்னார்கள். எனது மகன் என்னிடம் கதைக்கும்போது நான் நிச்சயமாக வருவேன் நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று சொன்னான். எனது மகனை என்னிடம் மீட்டுத் தாருங்கள் என்று ஆணைக்குழுவினரிடம் கண்ணீர்மல்க வேண்டினார். தொடர்ந்து மண்டைதீவு, 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பி.திரவியராஜா சாட்சியமளிக்கையில் 90ம் ஆண்டளவில் இடம்பெயர்ந்து அல்லைப்பிட்டி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தபோது எனது மகன் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டார். இன்றுவரை எங்கே இருக்கிறார் என்று தெரியாது. தேவாலயத்துக்கு வந்த இராணுவத்தினர் 40 வயதுக்குட்பட்ட அனைவரையும் வருமாறு கூறவே எனது மகன் சென்றார். அப்போது எனது மகனுடன் சேர்ந்து 20பேர் வரை இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக