செவ்வாய், 16 நவம்பர், 2010
சுனில் ஹந்துன்நெத்திமீது நடத்தப்பட்ட தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமே-மனோ கணேசன்..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்த ஜேவிபி எம்பி சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர்மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜேவிபி குழுவினர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். ஜேவிபியை விரும்பாத தமிழ்மக்கள் நடத்திய தாக்குதல் என்று வர்ணிப்பது மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கையாகும். அரச பயங்கரவாதம் தமிழ்மக்களுக்கு புதிய ஒரு விடயம் அல்ல. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு இது பழகிப்போன விடயமாகும். அரச பயங்கரவாதத்தின் மூலமான அனுபவங்களை தமிழ்மக்கள் மறக்கமுடியாது. 1971லும், 1989லும் அரச பயங்கரவாதத்தின் தாக்கங்களை அனுபவித்த ஜேவிபி சமீபகாலமாக அவற்றை மறந்திருந்தது. தமிழ்மக்கள் உச்சக்கட்ட துன்பங்களை அனுபவிக்கும்போது, அவை ஜேவிபியினருக்கு வலித்திருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். எனினும் இந்த கசப்பான உண்மையை மறந்துவிட்டு நாங்கள் நேற்று முதல்நாள் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகோதரர்களுக்கும் எதிராக யாழ்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக மக்கள் முன்னணியையும், தமிழ்மக்களையும் பொருத்தவரையில் நாம் எல்லாவிதமான வன்முறைகளையும் நிராகரிக்கின்றோம். வன்முறைகள் மூலமாக ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் வன்முறைகள் மூலமாக மிக அதிகமான துன்பங்களை சமகாலத்திலே அனுபவித்தவர்கள் நாடுமுழுக்க வாழும் தமிழ் மக்களாகும். இந்த வன்முறை சம்பவம் எதிர்காலத்தில் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்தி நிற்கின்றது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக