ஞாயிறு, 3 அக்டோபர், 2010

மன்னார் காக்கையன்குளம் பிரதேசத்தில் மீள்குடியேற்றம்..!

மன்னார் மாவட்டத்திலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் காக்கையன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 51 குடும்பங்கள் நேற்று முன்தினம் அங்கு மீள்குடியேறியுள்ளன. இவ்வாறு மீள்குடியேறிய மக்களின் தேவைகள் குறித்து கண்டறியவென வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாறூக் ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர். மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இரணை இலுப்பங்குளம் அரசினர் தமிழ் பாடசாலைக்குச் சென்ற அமைச்சர் தலைமையிலான குழுவினர், அங்கு தங்கியிருந்த இலுப்பைக்குளம், செட்டிக்குளம், மண்கிட்டி, பூசாரியார்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினர். அங்கு அம்மக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றிக் கேட்டறிந்த அமைச்சர் அவை குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். தற்போது இரணைஇலுப்பங்குளம் பாடசாலையில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 359 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார். இந்தப் பாடசாலையில் தற்போது 91 மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் தெரிவித்த அதிபர், கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் இன்றி மாணவர்கள் சிரமப்படுவதாக அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதன்பின்னர் காக்கையன்குளம் மதீனா நகருக்குச் சென்ற அமைச்சருடனான குழுவினர் அங்கு மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர். தற்போது விவசாய செயற்பாடுகளுக்காக அங்குள்ள ஐந்து குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதேச செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். காக்கையன்குளம், துவரங்குளம், வெளிக்குளம், சின்னரசங்குளம், உவர்க்குளம் போன்ற குளங்களே இவ்வாறு புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. இம்மக்களின் சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மேட்டு நில மிளகாய் பயிர்ச்செய்கைக்கான தண்ணீர் இயந்திரம், விதைகள் மற்றும் பசளைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் பணிகளைத் துரிதமாகத் தமது அமைச்சின் ஊடாக ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் இதன் போது கூறினார். பாலம்பிட்டி, பெரியமடு, தட்சனாமருதமடு, பாலபெருமாள்கட்டு, பாலையடி புதுக்குளம் கிராமங்களிலேயே இந்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக