வியாழன், 28 அக்டோபர், 2010

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்..!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் எதேச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பினைத் தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஜே.வீ.பி மாணவர் சங்கமே இதன் பின்னால் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பியகம மகளிர் சங்க அங்கத்தவர் பிமலிகா பொத்தவெல, ஒருசில பல்கலைக்கழக மாணவர்கள் வழி நடாத்தும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட இந்த செயற்பாட்டின் மூலம் பல்கலைக்கழகங்களில் கலகம் விளைவிப்பதாகவும் தூர பிரதேசங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் இதில் அகப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். இதன்போது களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 26ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் அன்றைய தினம் விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதிகமான களனி பிரதேச வாழ் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, களனிப் பல்கலைக்கழக விடுதியிலிருந்து கத்தி உட்பட கூரிய பொருட்களும், வெற்று மதுபானப் போத்தல்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விடுதியில் சட்டத்துக்கு மாறான முறையில் கூடும் மாணவர்களைக் கலைப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு நேற்று முன்தினம் கொழும்பு மேலதிக நீதிபதி, களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக