புதன், 20 அக்டோபர், 2010

எட்டுச் சிறைகளை மூடிவிட்டு கைதிகளை வெள்ளவாய நல்வழிப்படுத்தும் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு..!

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலை உட்பட மஹர, நீர்கொழும்பு, காலி, மாத்தறை, தங்காலை, எம்பிலிப்பிட்டிய மற்றும் பதுளை ஆகிய எட்டுச் சிறைச்சாலைகளையும் மூடிவிட்டு இங்குள்ள கைதிகளை வெள்ளவாயவில் 1000ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள நல்வழிப்படுத்தும் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்ல புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வெள்ளவாயவில் விமானத்தளமொன்று அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் மேற்படி நல்வழிப்படுத்தும் மையமான திறந்தவெளிச் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், 1000ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இந்தக் கட்டடப் பணிகள் தொடர்பாக சீனாவின் "கெடின்' நிறுவனம் கடனுதவிகளை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி நல்வழிப்படுத்தும் மையம் 10,000 கைதிகளைப் பராமரிக்கக் கூடிய இடவசதியைக் கொண்டது எனவும் வேலியிடப்பட்ட விவசாய நிலங்கள், வேலைத்தளங்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள், புனர்வாழ்வு நிலையங்கள் ஆகியவற் றைக்கொண்ட விசாலமானதொரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக இது அமையவுள்ளது எனவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்புப் பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும் சிறைக்கைதிகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலை முறைமைக்குப் பதிலாக விசாலமான நல்வழிப்படுத்தும் கட்டடத் தொடரொன்று அமைக்கப்படுவது இதுவே முதற்தடவை எனவும் இதன் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில் நகரப்புறச் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசலைத் தவிர்த்துக் கொள்ளல், கைதிகளின் சிரமத்தை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளல் ஆகிய குறிக்கோள்களுடன் இந்த நல்வழிப் படுத்தும் மையம் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக