குடியேறப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து தங்கியுள்ள சிங்கள மக்கள் தமக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் சார்பில், பிரதிநிதி மல்காந்தி தலைமையில் நேற்றுச் சென்ற ஒரு குழுவினர், தமது பெயர் விவரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ் என்பவற்றை கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானியிடம் சமர்ப்பித்துள்ளனர். இங்கு வந்துள்ள சிங்கள மக்களில் அநேகமான இளைஞர், யுவதிகள் உயர்தரக் கல்வியை நிறைவு செய்தவர்களாக உள்ளனர். இவர்களில் தாதிய பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்கள், கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதியில் பிரபல தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றியவர்களும் அடங்கியுள்ளனர். இத்தகையவர்களுக்குத் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு தாம் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி இ.பவானியுடன் தெரிவிக்கையில், இத்தகைய பணிகளை சுகாதார அமைச்சுதான் மேற்கொள்ளும் என்று வைத்தியசாலை நிர்வாகம் அவர்களுக்கு பதிலளித்து அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக