யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் வாடகைக்குக் குடியிருந்தார்களாம். அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனக்கோரி, 80 சிங்களக் குடும்பங்கள் யாழ் ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ளனர் 30 வருடங்களுக்கு முன்னர் யாழில் தாங்கள் வாடகைக்குக் குடியிருந்ததாகவும், அப்போது திருநெல்வேலி உட்பட நகரை அண்டிய பகுதிகளில் தமக்கு காணிகள் வழங்குவதாக அப்போது தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போதைய சூழ்நிலை காரணமாக தாங்கள் யாழிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அனுராதபுரத்தில் தங்கியிருந்து பின்னர் வேறிடங்களுக்குச் சென்றிருந்ததாகவும், இப்போது திரும்பிவந்துள்ள தங்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என 80 சிங்களக் குடும்பங்கள் யாழ் அரசஅதிபரிடம் கேரரிக்கை விடுத்துள்ளன. இக்கோரிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள யாழ் அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த குடும்பங்களையும், அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களையுமே அரசாங்கம் இப்போது உதவித்திட்டங்கள் வகுத்து மீள்குடியேற்றி வருவதாகவும் 30வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இக் குடும்பங்கள் தம்மை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் எனக்கோரி தமக்கு கடிதம் ஒன்றை செப்டம்பர்மாதம் 14ம் திகதி அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் அரசஅதிபர், இது குறித்து மேலதிக விபரங்களை அவர்களிடம் தாங்கள் கோரியிருந்த போதிலும் அந்த விபரங்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்றும், இக் குடும்பங்கள் தற்போது நாட்டின் தென்பகுதியில் எங்கு வசித்து வருகின்றார்கள் என்பதுபற்றிய விபரங்களைக்கூட தமக்குத் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தார்களா, அப்படியென்றால் எங்கு எப்படி வசித்தார்கள், இவர்களுக்குக் காணிகள் வழங்குவது குறி;த்து அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கின்றன, யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்ற இவர்கள் இவ்வளவு காலமும், அதாவது கடந்த 30 வருடங்களாக எங்கு வசித்து வந்தார்கள் என்பது பற்றிய விபரங்களை அந்தந்த மாவட்ட அரச அதிபர்களிடம் தகவல் பெறவேண்டியிருப்பதாகவும், இது குறித்து பல்வேறு வழிகளில் ஆராய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களது விபரங்களை பிரதேச செயலரிடமிருந்து கோரியிருப்பதாகவும், தகுந்த ஆதாரங்கள், ஆவணங்களுடன் இவர்களது விபரங்கள் குறித்து ஜனாதிபதி செயலணிக்குழுவிற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்ப வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னறிவித்தல் எதுவுமி;ன்றி இங்கு வந்துள்ள இந்தக் குடும்பங்கள் திரும்பிச் செல்லமாட்டோம் என கூறிக்கொண்டு உடைந்த யாழ் ரயில் நிலையக் கட்டிடத்திலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ளமையானது யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்திற்கு ஒரு கஸ்டமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக