ஞாயிறு, 31 அக்டோபர், 2010

முல்லைத்தீவு மேற்கு மற்றும் மடவாழ சிங்கன்குளம் பிரிவுகளில் 160 குடும்பங்கள் மீள்குடியேற்றம்..!

முல்லைத்தீவு மேற்கு மற்றும் மடவாழ சிங்கன்குளம் பிரிவுகளில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் நாளை திங்கட்கிழமை மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் எஞ்சியுள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்துமாறும், கமத்தொழில் காணிகளை விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு உட னடியாக பெற்றுக்கொடுக்குமாறும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, சிவநகர், மந்துவில், மல்லிகைத்தீவு, ஆனந்தபுரம் போன்ற ஆறு கிராமசேவகர் பிரிவுகளிளும் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பணிகள் பூர்த்தியடைந்ததும் இப்பகுதிகளிலும் மக்கள் உடனடியாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். எனினும், இப்பகுதியிலுள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் அறிவித்திருப்பதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இது உண்மைக்கு புறம்பானது என முல்லைத்தீவு அரசஅதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி விவசாயிகள் தமக்கு விவசாய நடவடிக்கைக்காக உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். ஏக்கருக்கு தலா 4000 ரூபாவீதம் அவர்களுக்கு உதவித் தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முரளிதரன் உறுதியளித்துள்ளார். விவசாயிகளின் விளை நிலங்கள் கால்நடைகளினால் அழிக்கப்படுவதாலும், வேலி அமைக்கத் தேவையான உபகர ணங்களை பெற்றுக்கொடுக்குமாறும் விவசாயிகள் பிரதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் மீளக்குடியமரும் மக்களின் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்ததுடன், மேலும் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் எஞ்சியுள்ள 21,000 பேரையும் விரைவாக மீளக்குடியமர்த்து வதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறும் பிரதியமைச்சர் முரளிதரன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக