வெள்ளி, 24 செப்டம்பர், 2010

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை..!

புலிகள் மீண்டும் தலைதூக்குவதை சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தை ஆளும்தரப்பில் தொடக்கிவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதையிட்டு உலகில் பல நாடுகள் இலங்கையைப் பாராட்டியுள்ளன. இதனூடாக சமூக, பொருளாதார ரீதியாக நாடு பாரிய நன்மைகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக உல்லாசப் பயணத் துறையில் பாரிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயம் வளர்ந்து வருகின்றது. யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தவென பலவிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. ஈழக் கனவை கைவிடாதவர்கள் உலகில் இருக்கவே செய்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குத் தேவையான பின்புலத்தைத் தயாரித்துக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களது செயற்பாடுகளை நோக்கும்போது, அவர்கள் மீண்டும் இந்நாட்டில் செயற்பட முயற்சிப்பதையும் அவர்களது செயற்பாடுகளை மீளமைக்கத் திட்டமிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டுவதாக அவை உள்ளது. அதனால் புலிகள் மீண்டும் தலைதூக்குவதை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதேவேளை புலிகளின் ஆதரவு இயக்கங்கள் வளர்ச்சிபெற்று வருவதையும் அவதானிக்க முடிகிறது. அத்தோடு புலிகளின் சர்வதேச வலையமைப்பு நாட்டுக்கு வெளியே ஈழ இராச்சியத்தை அமைக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்காக சர்வதேச ஆதரவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக ஐரோப்பாவிலும் மேற்கு நாடுகள் பலவற்றிலும் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் வடக்கு, கிழக்கிலும், கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ந்தும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவது அவசியம். இதற்காக நிலையான வேலைத்திட்டம் மிகவும் அவசியமாகும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக