வெள்ளி, 24 செப்டம்பர், 2010
தமிழ்மொழியில் கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சேவையில்..!
தமிழ்மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். தமிழ்மொழியை நன்றாக எழுத, வாசிக்க, முறைப்பாடுகளைப் பதிவு செய்யக்கூடிய வகையில் ஐந்து மாதகால கற்கை நெறியை முடித்துக் கொண்டு இவ்வாண்டு டிசம்பரில் 593 பொலிஸார் வெளியேற உள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள் உடனடியாக மேற்படி பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடியவகையில் வருடமொன்றுக்கு 1200 பொலிஸார் என்ற அடிப்படை யில் ஐந்தாண்டு காலத்திற்குள் 6000 பொலிஸார் பயிற்றுவிக்கப்படவுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். விஷேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தற்பொழுது பொலிஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டும், செயற்பட்டும் வருகின்றன. இந்த மாகாணங்களில் வாழும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுபவர்கள் விரைவில் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்படுவர். களுத்துறை, அனுராதபுரம், வவுனியா, மட்டு, கல்லடி, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பொலிஸ் பயிற்சி நிலையங்களில் வருடந்தோறும் 1200 பேர் பயிற்றுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக