சனி, 18 செப்டம்பர், 2010

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்பு..!!

கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கு சாரதிப்பயிற்சி வழங்கும் திட்டத்தை கிழக்கு மாகாணசபை தற்போது ஆரம்பித்துள்ளது. முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் பிரதேச செயலக ரீதியாக அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இளைஞர்கள் மத்தியில் இத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவும் முதற்கட்டமாகத் தெரிவாகியுள்ளது. பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், கலந்துகொண்டார். அவர் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்கள் 30 பேருக்கும் இதற்கான அனுமதி அட்டைகளை வைபவ ரீதியாக வழங்கி இப்பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன கிராமிய மின்சக்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தா. உதயஜீவதாஸ், பிரதேச செயலாளர் எஸ். கிரிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக