வியாழன், 9 செப்டம்பர், 2010

கால அவகாசம் இருந்திருந்தால் தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுத் தந்திருக்க முடியும்-ஹக்கீம்..!

தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நாடாளுமன்றில் கூறினார். அரசமைப்புத் திருத்தம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியதாவது, நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தல்களும், பலவந்தங்களும் இன்றி நிறைந்த மனதுடனேயே 18ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம். எமது கட்சியின் பரிபூரண அங்கீகாரத்துடனேயே ஆதரவாக வாக்களிக்கின்றோம். இன்றுகாலை இச்சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன், சிறீலங்கா.மு.கா. தனது மனச்சாட்சிக்கு விரோதமாகவே இன்று அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றது என்று கூறினார். இது உண்மைக்கு மாறானது. எங்களுடைய தாராளத் தன்மையை தவறாக எடைபோடக்கூடாது. அரசமைப்புத் தொடர்பாக எமக்கிருக்கும் சந்தேகத்தை நாம் ஜனாதிபதியிடமே விட்டுவிடுகின்றோம். அவர்மீதான ஆழமான நம்பிக்கையால்தான் நாம் அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்குகிறோம். நாம் வெளியில் இருந்துகொண்டு இதற்கு ஆதரவு வழங்குவதால் இதுதொடர்பில் நாம் அரசிடம் கேள்வி கேட்கமுடியும். அரசுடன் இணைந்திருந்தால் அது முடியாது. எனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து அரசமைப்புத் திருத்தத்துக்கு கூட்டமைப்பின் ஆதரவையும் பெற்றுக்கொடுத்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக