ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

முடிவின்றித் தொடரும் பணிப்பெண்களின் அவலம்..!

சவூதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்வது என்பதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘நரகம்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். வேலை நேரம் ஒழிவு நேரம் என்று தனித்தனியாக கொள்வதற்கு இடமிருப்பதில்லை. இடையில் கிடைத்தால் சில நிமிடங்களை ஓய்வாகக் கொள்ளவேண்டியதுதான். இதில் நேர்ந்து விடும் தவறுகளுக்காக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் சிரமங்கள் அவர்களை ஓர் இயந்திரத்தைப் போல் உணரவைக்கிறது என்றால், நிலவும் சூழல் அவர்களை இயந்திரமாகவே ஆக்கும். வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதியில்லை, குப்பைகளை கொட்டுவதற்குச் சென்றால்கூட அனுமதியின்றி செல்லமுடியாது.தனியாக தெலைபேசி வைத்துக் கொள்வதற்கோ, யாருடனும் தொலைபேசியில் பேசுவதற்கோ முடியாது. இப்படி ஓய்வின்றி வேலை செய்வதாலும், தங்களின் மனக் குறைகளை பகிர்ந்துகொள்ள வழியின்றி கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போன்ற சூழலாலும் அவர்கள் சிதைக்கப்படுகிறார்கள். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதில் சவூதியில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களின் நிலையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தனியாக மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கு சொல்வதற்கும் யாருமின்றி, செல்வதற்கும் வழியுமின்றி அந்த பாலியல் வதைகளை சகித்துக் கொள்வதைத் தவிர வேறு கதியில்லை. அண்மையில் விமான நிலையத்தில் 40 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க இலங்கையைச் சேர்ந்த ஒரு பணிப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவர் கூறியதைக் கேட்டால் பணிப்பெண்கள் எத்தகைய நிலையில் அங்கு பணிபுரிய வேண்டியதிருக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மார்பிலேயே கைவைக்கிறான்” என்று கூறி முடித்த போது அவர் கண்களிலிருந்து அவருக்குக் வழிந்தது. பணிப்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எங்களிடம் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறது காவல்துறை. ஆனால் புகார் கொடுக்கும் அளவுக்கான சூழலை ஏற்படுத்தாமல், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்பது எந்த விதத்தில் சரியானது? முன்னிலும் அதிக சித்திரவதைகளுடனும், நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளுடனும் வேலை செய்ய முடியுமா? புகார் கொடுத்து நிரூபிக்க முடியாத நிலையிலுள்ள பணிப்பெண்களை வேறு இடத்திலோ, வேறு வேலையிலோ சேர்த்துவிட காவல்துறைமுயலாது. ஏனென்றால் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை. பாலியல் கொடுமைகளைச் செய்வது ஆண்கள்தான், வீட்டிலுள்ள பெண்களிடம் அவர்கள் முறையிடலாமே என நினைப்பதும் கொடுமையான அனுபவமாகவே அமையும். அதன்பிறகு பழிவாங்கும் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதோடு பொருளாதார ரீதியிலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.இவ்வாறு தொடரும் நரகவாழ்க்கையை எமது நாட்டுப் பணிப்பெண்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் இதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.இனிமேலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மகளிர் சமுதாயம் பாதுகாக்கப்படாவிடின் அவர்களின் எதிர்காலம் இருள்நிறைந்ததாகவே காணப்படும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக