ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தீ வைப்பு..!!

திருகோணமலை சிறைச்சாலையில் ஞாயிற்றுகிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். சிறைச்சாலையின் ‘டீ’ பிரிவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 109 கைதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த திடீர் சோதனையின்போது கைதிகளிடமிருந்து இரண்டு செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையினால் ஆத்திரமுற்ற சிறைக் கைதிகள் சிலர் அங்குள்ள படுக்கை விரிப்புகளுக்கு தீவைத்துள்ளனர். தீ வெகு வேகமாக பரவியதையடுத்து ஏற்பட்ட புகைமூட்டத்தினால் தீவைப்பினை மேற்கொண்ட கைதிகளைவிட ஏனைய சிறைக்கைதிகளும் பாதிப்படையும் நிலை உருவானது. இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாகவே செயற்பட்டு அங்குள்ள ஏனைய சிறைக்கைதிகளை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கடற்படையினரின் தீ அணைக்கும் படையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று தீ பெருமளவில் பரவாதவாறு தீயை அணைத்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சிறைச்சாலை பகுதியை அடுத்துள்ள பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகள் இருந்தபோதும் தீ எங்கும் பரவாதவாறு துரிதகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தீவைப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிசார் மேற்கொண்டுள்ளனர். பதினொரு சிறைக்கைதிகள் இநத சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக