செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆட்சியை கைப்பற்ற முயலும் ரணில் முதலில் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்:கெஹெலிய..!!

அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப்பீடம் ஏற்றுவதற்கு முன்னர் தமது சொந்தக் கட்சியை ஒருங்கிணைத்து உறுப்பினர்களை தம்முடன் வைத்துக்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முயற்சிக்கவேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.நாடு ஒன்றின் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்று எண்ணுவதும் முயற்சிப்பதும் இயல்பான விடயமாகும். ஆனால் அதற்கு முன்னர் தனது கட்சியை கட்டிக்காக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் தலையாய கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கூடிய விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று முன்நாள் களனியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது: பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அதாவது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் அதனை கலைக்க முயற்சிப்பதற்கு முன்னர் தனது கட்சியை சீர்ப்படுத்த அவர் முயற்சிக்கவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியின் உறுப்பினர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முதலில் முயற்சிக்கவேண்டும்.அதனைவிடுத்து விரைவில் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன் என்று கூறினால் எப்படி? முதலில் தமது பக்கம் உள்ள விடயங்களை சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதுடன் சீர்ப்படுத்தவேண்டும். மேலும் பாரிய பலமான நிலையில் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது அவரின் மற்றுமொரு நகைச்சுவை என்றே கூற வேண்டும். மக்களுக்கு அதனை பற்றி நன்றாகவே தெயும். மற்றுமொரு விடயமாக சரத் பொன்சேகாவை விடுவிக்கப் போவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். பொன்சேகா விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறப்பாக செயற்படுவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி அடிக்கடி குற்றம் சுமத்தி வந்தது. அதனை சமாளிக்கும் வகையிலேயே தற்போது பொன்சேகா குறித்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக