ஞாயிறு, 2 மே, 2010

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் : பி.திகாம்பரம் எம்.பி

தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது குடும்பங்களின் சுபீட்சத்திற்காகவும் தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்து போராடும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.அட்டன் ,நோர்வூட் ,பொகவந்தலாவை ,கொட்டியாக்கலை ஆகிய தோட்டப்பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மேதினக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு நேற்று தோட்டவாரியாக இடம்பெற்ற போது ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொடியினை ஏற்றி இந்தச்சங்கத்தின் ஆதரவாளர்கள் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது, "நுவரெலியா மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களில் மேதினக் கூட்டங்களை நடத்துவதற்குரிய அனுமதிகிடைக்காத காரணத்தினால் இம்முறை நாம் தோட்டவாரியாக மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தோம். தொழிலாளர் தேசிய சங்கத்தினைப் பொறுத்தவரை இம்முறை மேதினம் முக்கியமானதாகும் .இன்றைய மலையகத்திலுள்ள போட்டி அரசியல் மத்தியிலும் அராஜக செயற்பாடுகள் மத்தியிலும் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றினைப் பெற்றுக்கொடுத்துள்ளமை மலையகத்தின் ஒரு மாற்றமென நான் நினைக்கின்றேன். எமது வெற்றிக்கு தோட்டத்தொழிலாளர்கள் உட்பட சகலதரப்பினரும் உறுதுணை புரிந்துள்ளனர்.இவர்களுக்கு நாம் உரிய சேவைகளைச்செய்வதற்கு திடச்சங்கற்பம் பூண்டுள்ளோம்.எமக்கு வாக்களித்த மக்களின் மனமறிந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.அரசியல் ரீதியாக மலைகத்தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சமூக ஒற்றுமையுடன் செயற்படுதற்கும் முன்வந்துள்ளேன். இவ்வாறானதொரு நிலையில் இன்று தோட்டத்தொழிலாளர் சமூகத்தினர் தமது தொழில் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.உழைப்புக்கேற்ற ஊதியத்தினைப்பெற்றுக்கொள்ள முடியாத வகையில் கூட்டொப்பந்த முறை ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டுமானால் எமது அமைப்பினை தொழிற்சங்க ரீதியாகவும் கட்டியெழுப்ப வேண்டும்.தொழிற்சங்க ரீதியாக பேரம் பேசுவதற்கு தொழிலாளர் தேசிய சங்கத்திற்குதொழிலாளர் ஒன்று திரண்டு ஆதரவு தரவேண்டும்." எனத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக