திங்கள், 26 ஏப்ரல், 2010

நல்லூர் உல்லாச ஹோட்டலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு ..!

தமிழ் மக்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க நல்லூர் பிரதேசத்தில் உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி மற்றும் கீரிமலைக் கடலுக்குள் இறங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும். தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதற்கும் அவர்களது சமயக் கடமைகளுக்குத் தடை விதிப்பதற்குமான ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த ஹோட்டல் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு தாம் யாழ்.மாநகர சபை மேயரைக் கேட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் கடைசி மன்னனான சங்கிலியன் ஆண்ட பிரதேசத்திலேயே இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஹோட்டல் அமையவுள்ள இடத்துக்கு அடுத்ததாக உள்ள நிலப்பரப்பிலேயே தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி செய்ததற்கான எச்சசொச்ச வரலாற்றுத் தடயங்கள் உள்ளன. அவை இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஹோட்டல் ஒன்றை அவ்விடத்தில் அமைப்பதன் மூலம் தமிழ் மன்னனின் வரலாற்றினை இல்லாமல் ஆக்குவதே இதன் நோக்கமாக இருக்கிறதென்று நாம் கருதுகிறோம். நல்லூர் என்பது தமிழ் மக்களுக்குப் புனிதமான இடமுமாகவுள்ளது. எந்தக் காரணம் கொண்டு இந்தப் பிரதேசத்தில் உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றினை அமைக்க முடியாது. இது மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கான அடிக்கல்லையும் ஒரு தனியார் வங்கி அண்மையில் நாட்டி உள்ளது. இவ்வாறான ஒரு சூழல் உருவாக நாம் அனுமதிக்க முடியாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.இதேவேளை, கீரிமலை கடல் கூட தமிழ்மக்களுக்குத் தடைப் பிரதேசமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம். தமிழ்மக்கள் பல பாரம்பரிய ரீதியான மதக் கடமைகளை இந்தக் கடலிலேயே நிறைவேற்றிக் கொள்வர். இறந்தவர்களின் அஸ்தி கூட இங்குதான் கரைக்கப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு புதிதாக ஓர் அறிவித்தல் பலகை காணப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட பிரதேச கடலுக்குள் இறங்குவதற்கு தடைவிதிப்பதாக இந்த அறிவித்தலில் காணப்படுகிறது, இது தமிழ் மக்களின் சமய, கலாசார பாரம்பரியங்களுக்கு தடைவிதிக்கும் ஒரு செயலாகவே நாம் பார்க்கிறோம். இறந்தவர்கள் மோட்சம் பெறவேண்டுமாயின் அவரது சாம்பலைக் கீரிமலை கடலில் கரைக்க வேண்டுமென்பது சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக எமது தமிழ் மக்களிடம் நிலவி வரும் ஒரு ஐதீகமாகும். இதன் காரணமாகவே எமது மக்கள் கீரிமலைக் கடலில் சாம்பலைக் கரைத்து வருகின்றனர். எண்ணங்கள் ஈடேறும் வகையில் இந்தக் கடலில் குளித்து தானம் வழங்குவதனையும் எமது மக்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் மத சுதந்திரத்துக்குத் தடைவிதிக்கும் வகையிலான இந்த நடடிவடிக்கைகளை யாரும் அனுதிக்கப்போவதில்லை. நாமும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாம் ஜனாதிபதியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பில் எடுத்துக் கூறவுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக