வியாழன், 8 ஏப்ரல், 2010

வவுனியா இளைஞர் அடித்துப் படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் கைது..!

வவுனியாவில் கடந்த 27ம் திகதி இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டுவந்த இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன. சாந்தசோலையைச் சேர்ந்த தங்கராசா கிருஷ்ணகோபால் என்ற இளைஞரே அடித்துக் கொலைசெய்யப்பட்டவராவர். கடந்த 28ம் திகதி பிறந்த தினத்தைக் கொண்டாடவிருந்த இந்த இளைஞரை முதல்நாள் மாலை மதுபான விருந்து உபசாரத்திற்கென அழைத்த இளைஞர்களே அடித்துக்கொலை செய்துள்ளனரென வவுனியா பொலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிகாயங்களுடன் அன்றிரவு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இந்த இளைஞர் இறப்பதற்கு முன் பொலிஸாருக்கு வழங்கிய உடனடி வாக்குமூலத்தில் ஈ.பி.டி.பி. கட்சியில் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் 6ம் இலக்கத்தில் போட்டியிட்ட குரு என்ற ஜெயராஜ், ஈ.பி. டி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் துன்பம் என அழைக்கப்படும் தினேஷ் ஆகியோரே தன்னைத் தாக்கினர் எனத் தெரிவித்துள்ளார். கடுங்காயங்களுடன் அன்றிரவு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் அடுத்தநாள் அங்கு உயிரிழந்துள்ளார். இக்கொலையுடன் சம்பந்தப்பட்டோர் எனக் கருதப்படும் நான்கு இளைஞர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஜெயராஜ், தினேஷ் ஆகிய இரு ஈ.பி.டி.பி.யினரும் தலைமறைவாகியிருந்தனர். அந்த இருவரும் சில தினங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டனர் என்றும் அவர்களும் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு ஏனைய சந்தேகநபர்களுடன் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் வவுனியா தகவல்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக