
இந்தியாவுக்கு எதிராகச் சிலர் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் எதுவுமே நடக்கப்போவதில்லை. இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவப் போவதில்லை என்று பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் தி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் செய்தியாளர் மாநாடு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. சிறீதரன் அங்கு மேலும் பேசும்போது கூறியதாவது: இலங்கை சிங்களவருக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. இங்கு வாழும் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மை மக்களுக்கும் இந்நாடு சொந்தமானது. இங்கே தமிழ்மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிங்களமக்கள் தமிழ்மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோன்று தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். நேர்மையான இனவாதம் அற்ற தலைவர்கள் இந்த இரு சாராரிடமும் இல்லாமைதான் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இப்போது காணப்படும் தலைவர்கள் தங்கள் சுகபோக வாழ்வுக்காக இனவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெளிநாடுகளில் தங்கள் குடும்பங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு நாடாளுமன்றப் பதவிகளுக்காக தமிழ் மக்களிடம் அவ்வப்போது பிரச்சினைகள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியானவர்களை எமது பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழவேண்டும். இராணுவமயமற்ற சூழலில் சகல மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும். வலி.வடக்குப் பகுதியில் உள்ளமக்கள் தமது சொந்த வீடுகளில் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்படவேண்டும். வேலைவாய்ப்புக்கள் வழங்கவேண்டும். வெறும் வாய்ப்பேச்சுடன் நில்லாது தமிழ்மக்களுக்குக் கிடைத்த சட்டவலுவுள்ள ஒரு தீர்வான மாகாணசபையை நிறுவி நடைமுறையில் செயற்படுத்தியது எமது கட்சியே. நாங்கள் அந்த அனுபவங்களைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுப்போம். இந்தியாவுடனான எமது உறவுகள் வலுவானவை. தமிழ்மக்களின் அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் பங்களிப்பு நிச்சயம் தேவை. இந்தியாவின் உதவியின்றி இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வு காணப்படமுடியாது. சிவாஜிலிங்கம் போன்றவர்களின் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. இந்தியா பெரிய ஜனநாயகநாடு என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். அடிப்படைத் தேவைகளுக்காக அரசியல் வாதிகளிடம் கையேந்தாமல் உரிமையோடு பெறக்கூடியதாகவும் மக்களின் நிலை மேம்படவும் அதனை நடைமுறைச் சாத்தியமானதாக்கவும் மக்கள் எமது கட்சிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக