வெள்ளி, 19 மார்ச், 2010
வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்டவற்றை முழுமையாகத் தீர்த்து வைப்போம்-அமைச்சர் யாப்பா..!
2012ம் ஆண்டுக்குள் இந்நாட்டு அடுப்பங்கரைகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் முற்றுமுழுதாகத் தீர்த்து வைப்போம். இதற்கான ஸ்திரமான திட்டத்தை நாம் நிறுவிவிட்டோம் என்று ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அபரக்க, தலிங்க பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதியினால் அடுப்பங்கரை யுத்தத்தை ஒழித்துக்கட்டுவது இலேசான விடயமாகும். ஜே.வி.பி.யினரும் ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் பிரசாரங்களைச் செய்வதற்கு கருப்பொருள் இல்லாததால் இவைகளைப் பூதாகரமாக்கிக் கொண்டு தங்கள் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இவர்களின் இந்தப் பிரசாரங்கள் புத்திஜீவிகளான மக்கள்முன் ஒருபோதும் எடுபடாது. 40 வருடங்களுக்கு முன்பிருந்த தேர்தல் பிரசாரங்கள் இனி எடுபடாது. மக்களை கஷ்டமின்றி வாழவைப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள். அதைத்தான் இன்றைய ஜனாதிபதி முன்னெடுக்கிறார். அதேபோல், புத்தியுள்ள பிரதிநிதிகள் நடைபெறவுள்ள தேர்தலில் உறுப்பினர்களாகத் தெரிவானால்தான் சகல செயற்பாடுகளும் சர்ச்சையின்றி முன்னெடுக்கப்படும். அவ்வாறான புத்தியுள்ள பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது பொதுமக்களின் கரங்களிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் நிறுவப்படும் துறைமுகம் மூலமும் வீரவில மாத்தளையில் நிறுவப்படும் சர்வதேச விமான நிலையம் மூலமும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பை பெறுவார்கள். சிறுசிறு நகரங்களெல்லாம் பெரும் நகரங்களாக மாறிவருகின்றன. இன்று திக்குவலை சகல வசதிகளையுமுடைய பெரும் நகரமாக மாறியிருப்பது முன்னுதாரணமாகும். பழைய கதைகளையும் வீண் வீராப்புகளையும் சில அரசியல் வாதிகள் பேசிக் காலங்களை கடத்திய காலமொன்றும் இருந்தது. இன்று புதுயுகம் நாடு மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டு செல்கிறது. அதற்கேற்ப மக்களும் மாற வேண்டும். அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். இவைகளைத் தான் அரசு செய்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக