ஞாயிறு, 7 மார்ச், 2010
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் பூரண ஒத்துழைப்பினை நல்கவேண்டும். யாழ். தலைமைப் பொலிஸ் அதிகாரி வேண்டுகோள்..!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களைச் சார்ந்த வேட்பாளர்களும் சுமுகமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு யாழ். பொலிஸ் தலைமையக பிரதான அதிகாரி உதய டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். இன்று காலை யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய யாழ். பொலிஸ் தலைமையக பிரதான அதிகாரி உதய டி சில்வா தான் முன்னொருபோதும் யாழ்ப்பாணம் வந்ததில்லை எனத் தெரிவித்ததுடன் தனது இடமாற்றத்துடன்தான் தற்சமயம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாண மக்களின் ஆதரவும் நட்பும் தம்மை பெரிதும் கவர்ந்துள்ளதாக கூறிய அவர் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போலல்லாது யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் நியமனத்திலிருந்து இன்றுவரை எதுவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை என்பதை தெரியப்படுத்துவதிலும் தான் மகிழ்ச்சியடைவதாக கூறினார். தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக 24 மணிநேரமும் செயற்படும் பிரிவொன்றை ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர் இதற்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தர்மபால செயற்படுவார் என்பதையும் தெரியப்படுத்தினார். யாழ். பொலிஸ் தலைமையக பிரதான அதிகாரி உதய டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களைச் சார்ந்த வேட்பாளர்கள் பலரும் பங்குகொண்டு தத்தமது அபிப்பிராயங்களைத் முன்வைத்ததுடன் தமது கோரிக்கைகளையும் தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக