வியாழன், 4 பிப்ரவரி, 2010

மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் தேசிய கொள்கைத் திட்டம் - அமைச்சர் மஹிந்த சமரசிங்க..!

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தேசிய கொள்கைத் திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைத் திட்ட வரைவு அண்மையில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவுத் திட்டம் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினக்கு விநியோகம் செய்யப்பட்டு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
கருத்துக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இறுதித் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்கைத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை மனித உரிமைகள் அமைச்சு நேரடியாக கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் தொடர்பான தரவுகளை பொதுமக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் பெற்றுக் கொள்ள ஆவண செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மனித உரிமை நிலைமை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, வியன்ன பிரகடன அமுலாக்கம் போன்றவற்றை கருத்திற் கொண்டு தேசிய கொள்கைத் திட்டமொன்றை வகுக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொள்கைத் திட்டம் நீண்ட கால ஆய்வின் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக