ஞாயிறு, 3 ஜனவரி, 2010

அமைச்சர் சந்திரசேகரனின் மறைவு தமிழ்சமூகத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே பேரிழப்பாகும் -ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச..!!

அமைச்சர் சந்திரசேகரனின் மறைவு தமிழ்சமூகத்திற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே பேரிழப்பு என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலியை நேற்று செலுத்திய ஜனாதிபதி பின்னர் நிருபர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர் சந்திரசேகரன் தனது அரசியல் வாழ்வில் சில தீர்க்கமான தீர்மானங்களை எடுத்தவர் என்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார, எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். இராஜகிரியவில் உள்ள அமைச்சரின் இல்லத்திலிருந்து நேற்றுக்காலை 11 மணிக்கு பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத்துக்கு எடுத்து வரப்பட்டது. பாராளுமன்றத்தின் வாசலில் வைத்து அரசதரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, சபைமுதல்வர் அமைச்சர் சிறிபால டீ சில்வா ஆகியோர் பூதவுடல் தாங்கிய பேழையை பொறுப்பேற்றனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்ட அமைச்சரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, அமைச்சர்கள், அரசதரப்பு மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சபாநாயகர், சபை முதல்வர் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலி உரையின் பின்னர், அமைச்சரின் பூதவுடல் அவரது சொந்த ஊரான தலவாக்கலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடல் தலவாக்கலை இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை மாலை நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக