ஞாயிறு, 3 ஜனவரி, 2010

மலையக மக்கள் சார்பாக அயராது குரல் எழுப்பி வந்தவர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான சந்திரசேகரன் அவர்களது திடீர் மறைவு தனக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் சார்பாக அயராது குரலெழுப்பி வந்தவர் என்றும் தனது சமூகம் சார்ந்த சிந்தனைகளால் தூண்டப்பட்டு முன்னணி செயற்பாட்டாளராக விளங்கியவர் என்றும் அன்னாரின் இழப்பு அவர் சார்ந்த சமூகத்திற்கு பாரிய இடைவெளியாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக நடைமுறைச் சாத்தியமான முறையில் தான் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளின் போது மலையக மக்கள் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ள நிலையில் அம்மக்கள் சார்ந்து உழைப்பதற்கு முன்வந்திருந்த அமைச்சர் சந்திரசேகரன் போன்றோரின் பங்களிப்புக்கள் இன்றியமையாதவை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்னாரின் பிரிவு காரணமாகத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் கட்சியினருடன் தானும் தனது கட்சியினரும் வட மாகாண தமிழ் பேசும் மக்களும் சோகங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக