ஞாயிறு, 3 ஜனவரி, 2010

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்கள் தீர்க்கமாக சிந்தித்து செயற்பட வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு..!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களது வெற்றிக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியமையாததாக இருக்கும் இன்றைய சூழலில் எமது மக்கள் மிகத் தீர்க்கமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். இன்று காலை அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் யாழ்.மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் யாழ். தேசவள விவசாயிகள் சம்மேளனம் பனை தென்னைவள அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்திப்பில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலப் போர் நடவடிக்கைகளின் போது அத்தியாவசிய உற்பத்தி மற்றும் விநியோகங்களிற்காக அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறு விடுத்த வேண்டுகோளை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அதற்கேற்ற பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். தீவகப் பகுதிகளில் கடற்தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்வதற்கு இடையூறாக இருந்த அனைத்துத் தடைகளும் இன்றுடன் முற்றாக நீக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வீதியோரங்களில் போடப்பட்டிருந்த தடைகள் மற்றும் காவலரண்களையும் நீக்கி மக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு வழியேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாதிப்பிற்கு உள்ளான சங்கங்களின் மீள்செயற்பாட்டிற்கு என இலகு கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசாங்க அதிபர் ஊடாகப் பெறப்பட்ட கடன்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட மேலதிக பற்றுக்களைச் செலுத்துவதற்குச் சரியான நிதி விபரங்களைத் தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். தொழில் மற்றும் அனறாட நிலைமைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து ஆராய்வதறகாக ஒன்று கூடியுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் தமக்குச் சரியான அரசியல் தலைமைத்துவம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் அதற்கான செயற்பாடுகள் குறித்தும் இங்கு ஆராய்வது அவசியமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் போராட்டத்தைத் தவறான வழியில் வழிநடாத்திச் சென்ற பிரபாகரன் இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் தம்மைத் தோற்கடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பயனற்றுப் போனதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் பேசும் மக்கள் இன்று தமக்கான சுயாட்சி ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக