வெள்ளி, 22 ஜனவரி, 2010

தமிழ்க் கைதிகளை விடுவிக்கக்கோரி வெலிக்கடை சிறை முன்பாக உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!!

பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் இன்று கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையின் முன்பாக ஆர்ப்பட்டமொன்றை நடத்தியுள்ளனர். மனித உரிமைகள் இல்லம், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் கண்காணிப்புக் குழு, ஐக்கிய சோஷலிசக் கட்சி போன்றவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறைக்கைதிகளின் உறவினர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்களின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணைகளுமின்றி தமது உறவினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை விடுதலை செய்வதாகத் தெரிவித்து காலம் தாழ்த்துவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தமது விடுதலை தொடர்பிலும், விசாரணைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கக்கோரி சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளரான 53வயதுடைய கனகசபை தேவதாஸ் இம்மாதம் 1ம் திகதிமுதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவரது மனைவியான திருமதி சுபத்திரா தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக