ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சகலருக்கும் உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதே தமது அபிலாசையாகுமென யாழ் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு..!!

ஒன்றிணைக்கப்பட்ட நாட்டில் சகலருக்கும் உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதே தமது அபிலாசையாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கான சூழலை ஏற்கனவே நாட்டில் கட்டியெழுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்றுபகல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இன, மத, குல பேதங்களோ அல்லது பிரிவினைகளோ இனி இருக்க முடியாதென குறிப்பிட்ட ஜனாதிபதி, இனத்துவ ரீதியிலான அரசியல் தேவையில்லையென்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக வட மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். வடபகுதி பிள்ளைகளின் கல்வி குறித்து உரிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, தகவல் தொழில்நுட்பக் குடாநாடாக யாழ்ப்பாணத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், யாழ்..மாநகரச மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர் போன்றோர் பங்கேற்றிருந்தனர். இதேவேளை யுத்த வெற்றியின் பின்னர் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இன்றுகாலை பலாலி விமான நிலையம் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பலாலி முகாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யுத்தவீரர்களின் இராணுவதூபியில் அஞ்சலிசெய்த ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் உரையாற்றினார். இதன்போது பயங்கரவாதத்தை முறியடித்த நிலையில் தற்சமயம் நிரந்தர சமாதானத்தை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டிற்காக சகல தரப்பினரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதன்பின் யாழ். நாகவிகாரையைத் தரிசித்த ஜனாதிபதி, பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அத்துடன் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகத்தையும் சந்தித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக