செவ்வாய், 12 ஜனவரி, 2010

ஜாக்ஸன் மரணம் இயற்கையானதல்ல…அது கொலை - அவரது மரண அறிக்கையில்..!!

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதோ, இயற்கையானதோ அல்ல… அது ஒரு கொலை என்று அவரது மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியில் காட்டப்படாமல் இருந்த அந்த அறிக்கை இப்போது வெளியாகியிருப்பதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. கோடிக்கணக்கான அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகின் நம்பர் ஒன் இசைக் கலைஞரான மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு அவருக்கு சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை அவரது குடும்ப டாக்டர் முர்ரே வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டாக்டர் முர்ரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீடு, மருத்துவமனை மற்றும் ஓய்வு விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டன. இதைத்தொடர்ந்து ஜூலை 7ம் தேதி ஜாக்சன் சாவு குறித்து துணை பிரேத பரிசோதகர் செரில் மேக்விலி முதல் சான்றிதழ் அளித்தார். அதில், அவரது மரணத்துக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் ஆகஸ்டு 31ம் தேதி மருத்துவ பரிசோதகர் கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் பரிசோதனை நடத்தி சிறப்பு சான்றிதழ் அளித்தார். இந்த காரணங்களுக்காகவே மரணத்துக்குப் பின்னும் 70 நாட்கள் வரை ஜாக்ஸனின் உடல் புதைக்கப்படாமல் இருந்தது. அதில், ஜாக்சன் இறப்பதற்கு முன்பு வழங்கப்பட்ட மருந்து மாத்திரையில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் இருந்ததால் அது விஷமாக மாறி மரணம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மைக்கேல் ஜாக்சனின் சாவு இயற்கையானது அல்ல என்றும் அது ஒரு கொலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த அறிக்கை இப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகை மூலம் வெளியாகியுள்ளது. அடுத்து என்ன செய்யலாம் என்று ஜாக்ஸனின் உறவினர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக