செவ்வாய், 5 ஜனவரி, 2010

கிழக்கு மற்றும் யாழ். செல்வதற்கபன பயண எச்சரிக்கையை பிரிட்டன் தளர்த்தியது..!!

பிரிட்டிஷ் பிரஜைகள் இலங்கையின் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வது தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையைத் தளர்த்தியுள்ள பிரிட்டன், அதேவேளை, வன்னியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாகத் தன்னால் உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாதுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் பீட்டர்ஹெய்ஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு மற்றும் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்யவேண்டாம் என பிரிட்டிஷ் பிரஜைகளைத் தூதரகம் முன்னர் போன்று எச்சரிக்கவில்லை என பீட்டர் ஹெய்ஸ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் யாழ்ப்பாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்கு நிலைமைகளைத் தாம் பார்வையிட்டதாகவும் பாதுகாப்பு நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், சமீபத்தில் மோதல்இடம்பெற்ற பகுதிகளின் பாதுகாப்புநிலைமை குறித்து தமக்கு உறுதியாகத் தெரிவிக்க முடியாதுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிரிட்டிஷ் பிரஜைகளைத் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக