செவ்வாய், 5 ஜனவரி, 2010

2010ம் ஆண்டிற்கான அலுவலக நாள் ஆரம்ப நிகழ்வு இன்று கிழக்கு மாகாண சபையில்..!!

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில், கிழக்கு மாகாண அமைச்சர்கள் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள் மாகாண சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் திருமதி ரஞ்சினி நடராஜப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில், மலர்ந்திருக்கின்ற இப்புதிய ஆண்டில் எமது மாகாண சபையில் அனைத்து உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், திணைக்களத் தலைவர்கள், செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருமே மிகவும் தெளிவான உயரிய சிந்தனையோடு செயற்பட வேண்டும். அத்தோடு இவ்வாண்டில், இருக்கின்ற வளங்களைக் கொண்டு திறம்படச் செயற்படுத்தும் திறனாய்வு கொண்டவர்களாக மாறி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், எமது மாகாணம் மலர்ந்திருக்கின்ற இப்புதிய ஆண்டில் இருக்கின்ற அனைத்து வளங்களையும் பூரணமாக பயன்படுத்தி, எமது மக்களுக்கான தேவைகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நாம் புதிய ஆண்டில் எதிர்பார்க்கின்ற அனைத்து எதிர்பார்ப்புக்களையும் எட்;ட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஓர் அரச அலவலர்க்கு அர்ப்பணிப்பு என்பது முதன்மையானதும் இன்றியமையாததுமான ஒன்றாக விளங்கவேண்டும். அப்போதுதான் நாம் அலவலக நிருவாகங்களையும் மக்கள் பணியினையும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். எனவே மலர்ந்திருக்கின்ற இப்புதிய ஆண்டானது எமது மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி எமது நாட்டு மக்கள் அனைவர்க்குமே ஓர் வளமான ஆண்டாக அமைவதற்கு நாட்டு மக்கள் அனைவருமே ஒருமித்த சிந்தனையாளர்களாக மாற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட 2010ம் வருடத்திற்கான நாட்குறிப்பேடு மற்றும் நாள்காட்டி என்பன மாகாண சபை அமைச்சர்கள், செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உத்தியோகஸ்த்தர்களுக்கு முதலமைச்சர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்களான சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விவசாய அமைச்சர் து. நவரெட்ணராஜா, பேரவை பிரதித் தவிசாளர் குணவர்த்தன, அமைச்சுக்களின் செயலாளர்கள். பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திணைக்களத்தலைவர்கள், அமைச்சுக்களின் பிரத்தியேக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக