செவ்வாய், 5 ஜனவரி, 2010

கடந்த 4வருட காலத்தில் தனிநபர் வருமானத்தை 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்துள்ளேன் -ஜனாதிபதி..!!

கடந்த நான்குவருட காலத்தில் இலங்கையரின் தனிநபர் வருமானத்தை 2200 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கச் செய்துள்ளேன். இவ்வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள்வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்கு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர்களுடனான (மருத்துவ மாதுகள்) சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், மருத்துவ மாதுகள் இந்நாட்டுக்கு சிறந்த சேவைசெய்து வருகின்றார்கள். அவர்கள் வீடு, வீடாகச் சென்று தங்களது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். இவர்களது சேவையின் பயனாக இந்நாட்டில் தாய் - சேய் மரணம் பெரிதும் குறைந்துள்ளது. இதனையிட்டு அவர்களை நான் கௌரவப்படுத்துகின்றேன். நான் 2005ம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரையும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே இருந்தது. ஆயினும் 2005ம் ஆண்டுமுதல் பின்வந்த 04வருடங்களிலும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்நாட்டினரின் தனிநபர் வருமானம் 2200அமெரிக்க டொலர்கள்வரை அதிகரித்துள்ளது. இந்நாடு சுதந்திரமடைந்த பின்னர் தனிநபர் வருமானம் இவ்வாறான அதிகரிப்பைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவையாகும். இருந்தபோதிலும் இந்நாட்டினரின் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள்வரை அதிகரிக்கச் செய்வதே எனது இலக்காகும். இதற்குத் தேவையான சகல வேலைத்திட்டங்களும் இங்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு வளமான சுபீட்ச வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனை எனது கடமையாகவும், பொறுப்பாகவும் கருதுகிறேன். நாட்டில் அபிவிருத்தி இல்லாமல் சமாதானம் இல்லை. சமாதானம் இன்றி அபிவிருத்தியும் இல்லை. இதனை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டுதான் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையையும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக