வியாழன், 21 ஜனவரி, 2010

ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள 10அம்சக் கோரிக்கையில் நாட்டை துண்டாடும் எந்த யோசனையும் கிடையாது -ஈ.பி.டி.பி..!!

வடக்கு, கிழக்கு மக்களின் நலன்கருதி ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள 10அம்சக் கோரிக்கையில் நாட்டை துண்டாடும் எந்த யோசனையும் கிடையாது. ஆனால் இக்கோரிக்கைகள் மூலம் நாட்டை துண்டாட முயல்வதாக ஜே.வி.பியும் சரத் பொன்சேகாவும் இணைந்துள்ள குழுக்களும் குற்றம்சாட்டி வருவது நகைப்புக்குரியதாகும் என்று ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. நாட்டைக் காட்டிக்கொடுக்கும் மஹிந்த, டக்ளஸ் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறுகோரி எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான பிக்குமார்கள் சிலர் கொழும்பு கோட்டை ரயில்நிலையத்தின் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனூடாக இனவாதத்தைத் தூண்டி மக்களின் வாக்குகளைப் பெறவே பொன்சேகா முயல்வதாகவும் ஈ.பி.டி.பியின் 10 அம்சக் கோரிக்கையில் மறைப்பதற்கு எதுவித ரகசியமும் கிடையாது எனவும் ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே இந்த 10 அம்சக் கோரிக்கையை ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ளோம். இக்கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் எதுவித ரகசிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை. ஏ-9வீதி திறப்பு, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியேற்றுதல் உட்பட சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு சில கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பார் என நாம் உறுதியாக நம்புகிறோம். அதனடிப்படையிலேயே அவருக்கு ஆதரவு வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து கூடுதல் அதிகாரங்களைப் பெற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுவது ஈ.பி.டி.பி யின் பிரதான கோரிக்கையாகும். இதுதவிர அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டவர்களுக்கும் சரணடைந்தவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி புனர்வாழ்வளித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிய நடவடிக்கை எடுத்தல், போர்ச்சூழல் காரணமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்தல், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளில் இன விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்த்தல், தமிழ்பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் வரலாற்று வாழ்விடங்களில் இருந்து நாம் அகற்றப்படுவோம் என எழுந்துள்ள சந்தேகத்தை நீக்கி அவர்களது வரலாற்று வாழ்விடம் அவர்களுக்கே உரியது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் அடங்கலான 10 கோரிக்கைகளையே ஈ.பி.டி.பி முன்வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக