வியாழன், 3 டிசம்பர், 2009

மன்னார் விடத்தல்தீவு பகுதியில் நேற்று மீள் குடியேற்றம் ஆரம்பம்!!

மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நேற்று (02.12.2009) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் முதல் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டின் வட பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் வசித்துவரும் நிலையில் அம்மக்களை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அடம்பன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் ஒருவார காலங்கள் மீள் குடியேற்ற வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேசங்களுக்கு உட்பட்ட இலுப்பைக்குளம், சிறுக்கண்டல், மற்றும் களிமோட்டை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருப்பவர்களில் விடத்தல் தீவு பகுதியைச் சேர்ந்த 146 குடும்பங்களின் 582நபர்கள் நேற்றய தினம் அவர்களது சொந்த பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் விடத்தல்தீவு பகுதியில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளான விடத்தல்தீவு வடக்கு, மேற்கு, கிழக்கு, மற்றும் மத்தியபகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக