செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் இந்தியாவுக்கு விஜயம் !

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்றுள்ளார். இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரிலேயே இந்த விஜயம் அமைந்திருப்பதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம்செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களோடு பேச்சுக்கள் நடத்தவுள்ளார். இதன்போது இலங்கை இந்திய ராஜதந்திர உறவுகள் மற்றும் இலங்கையில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று மாத்திரமே இந்தியாவில் தங்கியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சிநிரல் எதுவும் இல்லையென்றும் கூறப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரடங்கிய குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக