யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சகலரும் இன்று முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே இதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில், இன்றிலிருந்து இவ் அனுமதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே செல்வோர் தாம் தங்கியுள்ள கிராமத்தின் பொறுப்பானவர்களுக்கு அறிவித்துவிட்டு வெளியே சென்றுவர முடியும் என வவுனியா மாவட்டச் செயலகம் தெரிவித்தது.
இதன் மூலம் இடைத்தங்கல் கிராமங்களில் தங்கியிருந்தோரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறுவதுடன், அவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபடவும் சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ள தென வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசுந்தரம் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்தோருக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வட்டைகளை அவர்கள் நிவாரணக் கிராமங்களின் பொறுப்பாளர்களிடம் காட்டிவிட்டுத் தாம் திரும்பி வரும் தினத்தையும் குறிப்பிட முடியும்.
அவர்கள் எந்தவிதப் பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம் இவர்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.
வடக்கின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியிருந்தோரில் பெருமளவிலானோர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலுமுள்ளவர்கள் ஏற்கனவே சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். அத்துடன் வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்களும் தமது உறவினர்களுடன் போய் இணைந்துகொள்ளும் வகையில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு மீள் குடியேறியவர்களைத் தவிர வவுனியா நலன்புரிக் கிராமங்களில் மேலும் 1,20,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கே இன்றுமுதல் சுதந்திரமாக வெளியில் சென்றுவர அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி 1,20,000 பேரையும் எதிர்வரும் 2010 ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு ள்ளது.
இதேவேளை, இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நிவாரணக் கிராமங்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச் சாவடிகளை அமைத்து, அவர்களும் வாக்களிக்க உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் கருத்து தெரிவிக்கை யில்; மேற்படி விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றுக்குத் தேர்தல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளதுடன், அதனையடுத்து அவரது வழிகாட்டல்களுக் கமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
மன்னார், அடம்பன் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட 325 பேருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு நேற்று அடம்பன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவர்களுக்கான சைக்கிள்களை வழங்கினார். மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக