செவ்வாய், 15 டிசம்பர், 2009

இத்தாலி பிரதமர் முகத்தில் குத்து- ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையி்ல் அனுமதி (வீடியோ..)

இத்தாலியின் மிலன் நகரில் கூட்டத்தில் பேசிவிட்டு வந்த பிரதமர் பெர்லுஸ்கோனி மர்மநபரால் அதிரடியாக தாக்கப்பட்டார். மூக்கு மற்றும் வாயி்ல் இருந்து ரத்தம் சொட்டசொட்ட பிரதமர் பெர்லுஸ்கோனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது ஊழல் புகார்கள் ஏராளமாக உள்ளன. மீடியா, ரியல் எஸ்டேட் மற்றும் விளையாட்டுத் துறையில் பெரும் முதலீடு செய்துள்ள இவர் தனது தொழில்களுக்கு வசதியாக சட்டதிட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதுமட்டுமின்றி 73 வயதான பெர்லுஸ்கோனி மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லை. பிரதமர் இல்லத்துக்கு 30 விபச்சார அழகிகளை அழைத்து கும்மாளம் போட்டதாகவும் புகார்கள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவே பெர்லுஸ்கோனியின் மனைவியும் அவரை விவாகரத்து செய்துள்ளார். ஆனால் இதெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி என்றும், இந்த புகார்கள் எதிலும் உண்மையில்லை என்றும் பெர்லுஸ்கோனி கூறிவருகிறார். எனினும், பெர்லுஸ்கோனி ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி கடந்த 5ம் தேதி ஆயிரக்கணக்கான இத்தாலிய மக்கள் ரோம் நகரில் பேரணி நடத்தினர். இந்நிலையில், மிலன் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த கூட்டம் ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் வீர ஆவேசமாக பேசிமுடித்துவிட்டு பெர்லுஸ்கோனி தனது காருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
வழியில் சிலருக்கு ஆட்டோகிராஃப் போடுவதற்காக நின்றார். அப்போது 42 வயது நபர் ஒருவர் உலோகத்திலான மிலன் டியோமோ மினியேச்சர் சிலையை கையில் வைத்துக்கொண்டு, ஆட்டோகிராஃப் வாங்குவது போல பிரதமரின் அருகில் வந்தார்.
ஆட்டோகிராஃப் வாங்கியதும் தடாலென யாரும் எதிர்பாராத நேரத்தில் பிரதமரின் முகத்தில் சிலையாலேயே ஒங்கி ஒரு குத்து விட்டார். நிலை குலைந்து கீழே விழுந்தார் பெர்லுஸ்கோனி. தடதடவென மூக்கில் இருந்தும், வாயில இருந்தும் ரத்தம் வடிந்தது. பாதுகாவலர்கள் அந்த நபரை சுற்றிவளைத்து விட்டனர்.
இந்த நிகழ்ச்சியை வீடியோக்கள் படம் பிடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட பெர்லுஸ்கோனி பாதுகாவலர்கள் உதவியுடன், முகமெல்லாம் ரத்தம் வடிவதை மறைத்துக்கொண்டே உடனடியாக காருக்குள் சென்றுவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் முகத்தில் குத்துவிட்ட நபரின் பெயர் மசிமோ டர்டாக்லியா. மசிமோ மீது இதுவரை எந்தவொரு கிரிமினல் வழக்குகளும் இல்லை எனக்கூறிய போலீசார் அவர் ஒரு மனநோயாளி என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக