திங்கள், 21 டிசம்பர், 2009

யாழ். வவுனியா போக்குவரத்தில் சுமுகநிலை ஏற்பட்டும் அதிக பஸ் கட்டணம் அறிவிடப்படுவதாக விசனம் !

யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையிலான ஏ9பாதை ஊடாக பயணிகள் பஸ்சேவையில் சுமுகமான நிலை ஏற்பட்டதன் பின்னரும்கூட நாடளாவியரீதியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையிலான பயணிகள் பஸ் சேவைக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் 138ரூபா கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பஸ்கள் வவுனியாவிலிருந்து மீண்டும் யாழ்.நோக்கி வரும்போது சில சமயம் பயணிகள் இன்றி வெறுமனே திரும்ப வேண்டியிருப்பதால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்குமாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையினர் யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இத்தகைய நிலையினைக் கருத்திற் கொண்ட அரசஅதிபர் விஷேட சலுகைக் கட்டணமாக பயணிகளிடம் 200 ரூபாவினை அறவிடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதன்பிரகாரம் 200ரூபா கட்டணத்துடனே இதுவரை காலமும் யாழ்.வவுனியா பயணிகள் பஸ் சேவை இடம்பெற்று வருகின்றது. தற்போது ஏ9 தரைப்பாதை ஊடாகப் போக்குவரத்து நடைமுறையில் தளர்வான நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதால் யாழ்.வவுனியாவுக்குமிடையிலான பஸ் சேவையில் பெருமளவான மக்கள் நாளாந்தம் பயணம்செய்து வருகின்றனர். அந்தப் பஸ்கள் யாழ்ப்பாணம் திரும்பி வரும்போது வவுனியாவில் இருந்து பெருமளவானோரை ஏற்றிக்கொண்டு வருகின்றன. இந்த நிலையினைக் கருத்திற்கொண்டு பயணிகள் பஸ் கட்டணத்தை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட 138 ரூபாவாக அறவிடுமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இதேவேளை தற்போது தனியார் மினி பஸ் சேவையினை கடந்த வியாழக்கிழமை முதல் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு தனியார் மூலமும் பயணிகள் சேவை இடம்பெற்று வருகிறது. தனியார் மினிபஸ்களும் அதே 200ரூபா கட்டணத்தையே அறவிடுகின்றனர். எனவே பயணிகள் நலனைக் கருத்திற்கொண்டு துறைசார் அதிகாரிகள் இது குறித்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக