திங்கள், 30 நவம்பர், 2009
உலகக்கிண்ண போட்டிக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து முத்தையா முரளிதரன் ஆலோசனை..
உடல்நிலை ஒத்துழையாமையால் உலகக்கிண்ண போட்டிக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக என்று இலங்கை கிரிக்கெட் அணிவீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உலகசாதனை படைத்துள்ளார். 131 டெஸ்டில் விளையாடி 788 விக்கெட்டுகளும், 334 ஒருநாள் போட்டிகளில் 512 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் முரளிதரனின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளே கைப்பற்றியுள்ளார். 396 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதற்கிடையே 2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிக்கு முன்பு முரளிதரன் ஓய்வுபெறலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு 37வயதாகிறது. என்னால் அதிகமான அளவுக்கு ஓவர்கள் வீச முடியவில்லை. 15முதல் 16ஓவர்கள் வரை வீசினாலேயே களைப்பாகி விடுகிறேன். ஆனால், ஒருநாள் போட்டியில் அப்படி பிரச்சினை இல்லை. 10 ஓவர்கள்தான் வீசவேண்டும் என்றாலும் என்னால் அதிகநாள் விளையாட இயலாது. உலகக்கிண்ண போட்டிக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருகிறேன் என்று முரளிதன் தெரிவித்துள்ளார். இலங்கைஅணி இதுவரை டெஸ்ட்போட்டியில் இந்தியாவில் வெற்றிபெற்றதில்லை. தற்போது நடைபெறும் தொடரிலும் இலங்கை வெற்றிபெற முடியாமல் திணறி வருகிறது. இது பற்றி கேட்டபோது, இந்தத் தொடரில் இலங்கைஅணி ஒரு டெஸ்டில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன் என்று முரளிதரன் கூறியுள்ளார். ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஓர் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக