திங்கள், 30 நவம்பர், 2009

அரசியல் நாகரீகத்தையும், பண்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சுவிஸ் மகாநாடு ஒரு அடித்தளமாக அமைந்தது - புளொட் தலைவர் உரை..

யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கொழும்பு) ஏற்பாட்டில் யாழ். ஸ்கந்தரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.கந்தையா அவர்களின் நினைவு விழாவும், அக்கல்லூரியின் முன்னைநாள் அதிபர் அமரர்.திரு.வி. சிவசுப்பிரமணியம் (வைசர்) அவர்களின் நூறாவது பிறந்ததின நினைவு விழாவும் கொழும்பு, வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்று (29.11.2009) மாலை 4.30மணிமுதல் இரவு 7.30வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், தேவாரம், வாழ்த்துப்பா நிகழ்வுகளைத் தொடர்ந்து திரு.ச.மகேந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து திரு.க.நீலகண்டன், கலாநிதி.மு.கதிர்காமநாதன், திரு.ந.கருணைஆனந்தன், புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், டொக்டர் டபிள்யூ.திசேரா, கலாநிதி என்.தணிகாசலம்பிள்ளை, டொக்டர் சி.சிவானந்தராசா, திரு.து.ரகு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள், ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஸ்தாபகர் கந்தையா மற்றும் அதன் முன்னைநாள் அதிபர் அமரர் வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் குணங்களைப் பற்றியும், பாடசாலையின் சிறப்பு பற்றியும், அங்கு தான் பயின்ற காலங்களையும் பற்றி எடுத்துக் கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். ஸ்கந்தவரோதயக் கல்லூரியானது என்னுடைய பேரனாருடைய முகாமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்நிலையில் 60ம் ஆண்டுத் தேர்தலின் போது உடுவில் தொகுதியில் எனது தந்தையாருடன் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு, வீ.பொன்னம்பலம் அவர்களுக்கு லீவு கொடுக்கப்பட்டு அவர் தேர்தலில் போட்டியிட்டார். அது மாத்திரமல்ல அந்த தேர்தல் காலங்களில் வீ.பொன்னம்பலம் அவர்கள் எங்களுடைய பகுதிக்கு வருகின்ற போது எங்களது வீட்டுக்கு வந்து தேனீர் அருந்திச் செல்வது ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் எனது தந்தையாரும் வீ.பொன்னம்பலம் அவர்களின் அளவெட்டிப் பகுதிகளுக்கு செல்கின்ற போது வீ.பொன்னம்பலம் அவர்களின் வீட்டிற்குச் சென்று தேனீர் அருந்திச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படியான ஒரு அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தனிமனித பண்புக்கள் அன்று நிறைந்திருந்தது. இந்த பண்புகள் முழுக்கமுழுக்க அழிக்கப்பட்டு, மாற்றுக்கருத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு பயந்து ஒதுங்கி வாழுகின்ற ஒரு நிலைப்பாட்டில் கடந்த மே 18ற்கும் பின்பு ஒரு மாற்றம் வருவதை சுவிஸ் மாநாட்டில் நான் அறிந்து கொண்டேன். அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். முகத்தை முகம்கொடுத்துக் கதைக்காதவர்கள் கூட ஒருவரையொருவர் பார்த்து அன்னியோன்யமாக கதைக்கின்ற, ஒன்றாக இருந்து உணவருந்துகின்ற நிலைகள் எல்லாம் அங்கு நிலவியது. சுவிஸ் மகாநாட்டில் வேறு எதையும் முழுமையாக சாதிக்காது விட்டாலும் ஒரு அரசியல் நாகரீகத்தையும், பண்பையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அந்த மகாநாடு ஒரு அடித்தளமாக அமைந்தது என்றே நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில் தமிழ் சமூகத்தின் கல்வியானது ஒரு பின்தங்கிய நிலைமையில் இருக்கின்றது. இன்றைக்கு முகாம்களில்கூட பாடசாலைகளை நடத்தி அந்தப் பிள்ளைகள் பரீட்சைகளில் தோற்றச் செய்வதற்காக பல அதிகாரிகள், ஆசிரியர்கள் எல்லாம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தமிழ் சமூகத்தைப் பொறுத்தமட்டில் கல்விதான் அவர்களின் ஒரு மூலதனமாக இருந்திருக்கிறது. அது இன்று முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் இதனை மீளக் கட்டியெழுப்பும் கடமையானது தனியாக கல்விச் சமூகத்தினுடைய மாத்திரம் என்று கருதாமல், தமிழ் சமூகத்தில் இருக்கின்ற அனைவருமே தங்களால் இயன்றளவு உதவிகளைப் புரிந்து வடகிழக்கில் முற்றாக அழிந்துள்ள எங்களுடைய கல்விச் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக