சனி, 24 அக்டோபர், 2009

புலி முகவர்களைத் தேடி தாய்லாந்தில் வேட்டை, அப்பாவி தமிழ் அகதிகள் பாதிப்பு.. புலி முகவர்களான பிரபாவும், சங்கருமே பிரதான இலக்கு!

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜண்டாக செயற்பட்டுவரும் கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான யோகி என்கிற யோகேஸ்வரன் தங்கியிருந்த தாய்லாந்தின் பாங்கோக் நகரில் உள்ள சுக்குமித் பகுதியில் நேற்று முன்தினம் பாங்கோக் பொலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 15இலங்கைத் தமிழ் அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆயினும் யோகி என்னும் யோகேஸ்வரன் தப்பிச் சென்றுவிட்டார். குறித்த 15 இலங்கைத் தமிழ் அகதிகளும் 01வருட தாய்லாந்து விசாவுடனும், களவாகப் பெறப்பட்ட வேலைக்கு செல்வதற்கான போலி அனுமதிப் பத்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் அக்ரம் என்கிற கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபரும், ஜெகன் என்கிற தமிழரும் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மேற்படி யோகி என்கிற யோகேஸ்வரனின் வலதுகரமாக அதாவது ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யோகியின் ஏஜண்ட் தொழிலுக்கான உதவி முகவராக அதாவது சப் ஏஜண்டாக செயற்பட்டுவந்த கொழும்பைச் சேர்ந்த அன்ரன் என்கிற அன்ரனி தான் தங்கியிருந்த தாய்லாந்தின் பேட்காசெயம் என்னும் இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மேற்படி 15 இலங்கைத் தமிழ் அகதிகளையும் கொவின்புளு என்னுமிடத்திலுள்ள தடுப்புமுகாமில் தங்கவைத்துள்ள தாய்லாந்து அரச தரப்பினர், அவர்களை இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு அங்குள்ள இலங்கைத் தூதுவராயலத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடன் கைதுசெய்யப்பட்ட அக்ரம் மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் சோன்புரி என்னுமிடத்தில் அமைந்துள்ள சோலே என்னும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை தப்பிச் சென்றுள்ள யோகி என்னும் யோகேஸ்வரன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த அன்ரன் என்கிற அன்ரனி ஆகிய இருவரையும் கைதுசெய்யும் பொருட்டு தாய்லாந்து குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக வலைவீசித் தேடிவருகின்றனர். இவர்களைத் தேடும் நடவடிக்கைகளின் காரணமாக தாய்லாந்திலுள்ள அப்பாவி இலங்கைத் தமிழ் அகதிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன் மேலும் பலர் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி யோகி மற்றும் அன்ரனி உள்ளிட்டவர்கள் புலி முகவர்களான பிரபா மற்றும் சங்கர் ஆகியோரின் தலைமையின்கீழ் செயற்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து பொலீசாரின் தற்போதைய விசேட தேடுதல் வேட்டையின்போது புலி முகவர்களான பிரபாவும் சங்கருமே பிரதான இலக்காக உள்ளனர் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக