1983ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த வாழ்க்கை நிலைக்கு நாம் திரும்ப வேண்டும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களினது மீள்குடியேற்றத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் இவ்வாறு வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். வர்த்தகர்களுக்கு பல இடையூறுகள் வந்த போதிலும் அவர்கள் சமூகநலனில் அக்கறை கொண்டவர்களாக கடந்த காலத்தில் பல உதவிகளை வழங்கி வந்துள்ளனர் எனவும் சொன்னார். வர்த்தகசங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்தும் பேசுகையில்- கடந்த 30வருடகால விடுதலைப் போராட்டமானது இரண்டு இலட்சத்திற்கு அதிகமான மக்களை முள்ளுக்கம்பிகளுக்கு அடைத்து வைத்துள்ள நிலைக்கு கொண்டு வந்துள்ளது. 83க்கு முன்னர் போன்றதொரு இயல்பு நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் வரி, கப்பம் கடத்தல் என்ற பேச்சுக்கு இடமிருக்க கூடாது. நான் புளொட் அமைப்பை சேர்ந்தவன் எங்களுடைய அமைப்பு கடந்த காலத்தில் சில தவறுகளை விட்டது. அந்த நிலை இனிமேலும் தொடராது. எமது அரசியல் பயணத்தில் நாம் எந்த தவறுகளையும் விட்டதில்லை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வு காணும்வரை தேசிய கட்சிகளுடன் நாம் எந்த தேர்தலிலும் இணைந்து கொள்ளப் போவதில்லை. மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடிய காரியங்களில் நகரசபை நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களுக்கும் நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம் நகர அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவோம் என்றார். சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தலைவர் பி.எஸ்.அப்துல்லா, செயலாளர் எஸ்.சிறிஸ்கந்தராசா, உப தலைவர் கே.இராசலிங்கம், உட்பட பலர் உரையாற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக