சனி, 17 அக்டோபர், 2009

50,000பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம். 620 கர்ப்பிணிகள் உட்பட்ட, 3260 பேர் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50000 பேரை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி முதற்கட்டமாக 620 கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட்ட 3260 பேர் 62 பஸ் வண்டிகளில் அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களது உடைமைகளை ஏற்றிச் செல்வதற்காக 27 பெரிய ரக லொறிகளும் பயன்படுத்தப் பட்டன என வவுனியா அரச அதிபர் திருமதி. பீ.எம்.எஸ்.சர்ள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்றுத் தொடக்கம் 2500-3000 வரையில் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்று 620 கர்ப்பிணித் தாய்மார்கள் 12 பஸ் வண்டிகளிலும், அவர்களது உடைமைகள் 2 பெரிய லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏனைய 2500 பேரும் 50 பஸ் வண்டிகளிலும், அவர்களது உடைமைகள் 25 லொறிகளிலும் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்றுக்காலை முதல் இவர்களைக் கட்டம் கட்டமாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்றுக்காலையிலேயே முதல்கட்டமாக புறப்பட்டுச் சென்றனர். யாழ்.நகருக்கு ஏ9 பாதையூடாக செல்லும் இவர்களை யாழ் அரச அதிபர் கே.கணேஷ் பொறுப்பேற்பதுடன் அவர்களது சொந்த இடங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலகங்களுக்கும் கிராம சேவகர்களுக்கும் ஒப்படைக்கப்படுவார்கள் என்று வவுனியா அரசஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 5000 பேரும் விரைவில் குடியமர்த்தப் படவுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டங்களின் நிவாரண கிராமங்களிலுள்ள 4000 பேரும் குடியமர்த்தப் பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக