சனி, 17 அக்டோபர், 2009

மூன்று வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளையும், துப்பாக்கிச் சூடும் வவுனியாவில் சம்பவம்.. புலிகள் நடத்தியதாக சந்தேகம்! (இணைப்பு-2)


வவுனியாவில் நேற்றிரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக்கொள்ளைச் சம்பவத்தில் மூன்று வீடுகள் ஒரே நேரத்தில், ஒரே விதத்தில் கொள்ளையிடப் பட்டுள்ளன. கொள்ளையனாக வந்த நபர் தான் கொண்டு வந்திருந்த (ஏகே47ரகத் துப்பாக்கி) ஆயுதத்தைக் காண்பித்து வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைத்துள்ளார். அடிபணிய வைத்த அவர் அங்கிருந்தவர்களிடம் “எங்களுக்கும் வயிறிருக்கின்றது நாங்களும் சாப்பிட வேண்டும்” என்னும் தோரணையில் பேசியுள்ளார். அதன்பின்னரே அங்கிருந்தவற்றைக் கொள்ளையிட்டுள்ளார். இவர் தனது கைவரிசையைக் காட்டிய மூன்று வீடுகளில், புளொட் ஆதரவாளர் ஒருவருடைய வீடும் அடங்கியுள்ளது. எனவே, இக்கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப் பட்;டுள்ளதாகவே தோன்றுகின்றது. அதுமட்டுமன்றி, அவர் கொள்ளையிட்ட விதமும், கொண்டிருந்த தற்துணிவும் இவர் நிச்சயமாக புலிகள் இயக்க உறுப்பினர் என்றே பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. எனினும் அவர் வவுனியா பிரதேசத்தினைச் சேர்ந்தவரல்ல என அவரது முகத்தை அடையாளம் கண்டவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எவ்வித தயக்கமுமின்றி தன்னுடைய முகத்தினை வெளிப்படுத்தி இத்திருட்டில் ஈடுபட்டுள்ள இவர் நிச்சயமாக இறுதி யுத்தத்திலிருந்து தப்பித்த புலிகள் இயக்கத்தவராகவே இருக்க முடியும் என பலரும் நம்புகின்றனர். இந்நபர் பேசிய விதமும், இவர் அபகரித்து சென்ற பொருட்களும் ஒருவர் இருவருக்காக நிகழ்த்தப்பட்டதல்லவென்றும், இவருடன் இன்னும் பலர் இருக்க முடியும் என்ற ஐயங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இவர் கொள்ளையிட்டு விட்டு தப்பிச் செல்ல எத்தனித்தபோது, கொள்ளையிடப்பட்ட வீடுகளில் முதலாவது வீட்டின் உரிமையாளர், தன்னுடைய முன்வீட்டு இளைஞரையும் அழைத்துக் கொண்டு இவரைப் பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார். இவர்களுடன் இன்னும் சிலரும் திருடனான நபரைப் பிடிக்க முற்படுகையில் அச்சம் கொண்ட குறித்தநபர் இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூட்டை நிகழ்தியுள்ளார். இவ்வேளையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முதலாவது வீட்டின் உரிமையாளரான ராமமூர்;த்தி புலேந்திரன் (வயது36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உதவிக்கு வந்த முன்வீட்டு இளைஞரான திருநாவுக்கரசு கிருபாகரனின் (இவர் புளொட் முக்கியஸ்தர் ஒருவரின் மைத்துனர்) காலிலும் துப்பாக்குச்சூடு விழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட படுகாயம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவரின் காலை துண்டிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் பதற்றம் நிலவியுள்ளது. இத்திருடனுடன் பலர் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதானால் தொடர்ந்தும் பல கொள்ளைச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் பலரால் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ஆயுதம் தாங்கிவரும் திருடர்களான இவர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பு பெறுவதென்று தெரியாது மக்கள் திணறிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக