செவ்வாய், 22 செப்டம்பர், 2009

ஒபாமா முன் ஐ.நாவில் உரையாற்றும் லக்னோ சிறுமி


நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுப்புற சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்றுப் பேசவுள்ளார்.
அவரது பெயர் யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா. லக்னோவில் உள்ள புனித பிடலிஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நாளை நடக்கும் கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக புவி வெப்பமாதல் குறித்து பேசவிருக்கிறார்.
ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறார் யுக்ரத்னா.
இந்த கூட்டத்துக்கு ஐநா பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார். இந்தியா சார்பில் வெளியுறவு துறைஅமைச்சர்எஸ்எம் கிருஷ்ணா, சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து சிறுமி யுக்ரத்னா கூறுகையில்,
ஒபாமாவிடம் உங்களின் கொள்கைகள் எங்களை பாதிக்கலாம். நீங்கள் இப்போதே சரியான முடிவை எடுத்தால் எங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என கூற விரும்புகிறேன்.
நமக்கு முன்னோர்கள் மிகவும் அழகான, பசுமையான, தூய்மையான கிரகத்தை விட்டு சென்றனர். ஆனால், தற்போது நாம் அவற்றை மாசுபடுத்திவிட்டோம். பாழ்படுத்திவிட்டோம். நாம் அடுத்து வரும் தலைமுறையினருக்கு மோசமான கிரகத்தை கொடுக்க இருக்கிறோம். இது தவறு.
இதை முன்னூறு கோடி இளைஞர்களின் கருத்தாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். இந்த பூமியை மீண்டும் பசுமையான கிரகமாக மாற்ற அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம்.
ஒவ்வொரு நாடு்ம் சுற்றுப்புற சூழல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தனி மனிதர்கள் திருந்தினால் மட்டுமே உலகம் மாறும்.
எங்களை போன்ற இளைஞர்களின் குரல்களை கேளுங்கள். சுற்றுப்புற சூழலை காக்க தேவையான, தங்களால் முயன்றவற்றை மேற்கொள்ளுங்கள் என பிரதமர் மன்மோகன் சிங்கையும், சுற்றுப்புற சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் கேட்டு கொள்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக