சனி, 12 செப்டம்பர், 2009

வவுனியா நகரசபையின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உறுப்பினர்கள் இன்றையதினம் பதவிப்பிரமாணம்!


அண்மையில் நடைபெற்ற வவுனியா நகரசபைக்கான தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட 3 உறுப்பினர்களும் இன்று (வியாழன்) சமாதான நீதவானும், ஆன்மீகவாதியும், சமூகசேவையாளருமான இறைபணிச் செம்மல் வை.செ.தேவராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றனர்.ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவருமான ஜி.ரீ.லிங்கநாதன் மற்றும் சுந்தரம் குமாரசாமி, கந்தசாமி பார்த்திபன் ஆகிய மூன்று உறுப்பி்னர்களுமே இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த வைபவம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் வன்னிப் பிராந்திய பொறுப்பாளர் பவான் எஸ்.சிவநேசன் தலைமையில் இடம்பெற்றது.
கட்சி முக்கியஸ்தர்கள், நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய நகரசபை உறுப்பி்னர் ஜீ.ரீ.லிங்கநாதன், “யுத்தம் முடிந்த உடனேயே அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்தல் இப்போது அவசியமில்லை என நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறினோம். ஆனால் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்காமல் இந்தத் தேர்தலை நடத்தியது.
இந்தத் தேர்தல் முடிவுகளை நாங்கள் தோல்வியாகப் பார்க்கவில்லை. இதே நகரசபையைத் தலைமை தாங்கி நடத்திய நாங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனை முதன்மைப்படுத்தி அதற்காகவே செயற்படுவோம்” எனக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூறிய நாங்கள் இந்த பதவியேற்பு வைபவத்தை ஆடம்பரமாகக் கொண்டாட விரும்பவில்லை. எளிமையான முறையில் எமது பதவிப்பிரமாணத்தைச் செய்து கொள்ளத் தீர்மானித்தோம். அந்த வகையிலேயே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டோம்.
நாங்கள் இந்த நகரசபைக்குள் அரசியல் நடத்தமாட்டோம். சபைக்குத் தலைமை தாங்குபபவர்கள், இந்த நகர மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுவோம்” என்றார்.
இங்கு உரையாற்றிய மற்றுமொரு உறுப்பினராகிய சுந்தரம் குமாரசாமி, “பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எங்களை உறுப்பினர்களாகத் தெரிவு செய்த இந்த நகர மக்களுக்கு நாங்கள் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வவுனியா நகரசபையின் கடந்த கால ஆட்சி நிர்வாகத்தின்போது இந்த நகர மக்கள் எவ்வாறு எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தார்களோ, அதேபோன்று இந்த முறையும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் வாக்களிப்பின்போது எங்களை ஆதரித்ததைப் போன்று எங்களது சபைச் செயற்பாடுகளி்ன்போதும், எமக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
சமாதான நீதவானாகிய வை.செ.தேவராஜா அங்கு உரையாற்றுகையில்,
“எமது மக்கள் இன்று சொல்லொணாத துன்பத்தி்ற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இதற்கு எமது கட்சிகளிடையேயும், இயக்கங்களிடையேயும் நிலவிய ஒற்றுமையின்மையே காரணமாகும். ஆகவே இந்த ஒற்றுமையற்ற நிலைமையை மாற்றி அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் எமது மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
இன்றைய நிலைமையில் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியின் கீழ் திரண்டு செயற்பட வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது” எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக