புதன், 23 செப்டம்பர், 2009

பூந்தோட்ட இடைத்தங்கல் முகாமில் பதட்டம்.

வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள முகாம் ஒன்றில் தங்கியுள்ள பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தொடர்ந்து அங்கு பதட்ட நிலைமைகள் காணப்படுவதாகவும் முகாமுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளதாவும் தெரியவருகின்றது. குறிப்பிட்ட முகாமில் தங்கியிருந்த நபர் ஒருவர் முகாமை விட்டு தப்பிச்சென்றிருந்து, மீண்டும் முகாமின் வேலியின் ஊடாக உள்நுழைய முற்பட்டபோது படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் படையினரின் பிடியில் இருந்து தப்பியோட முற்பட்டபோது அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் அவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதை தொடர்ந்து அங்குள்ள மக்கள் அவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு விட்டார் என படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் மீண்டும் முகாம்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அவர் கடத்தப்படவோ, கொலை செய்யப்படவோ இல்லை என முகாம் மக்களுக்கு காண்பிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அங்கு மக்களின் பதட்டம் தணியவில்லை என தெரியவரும் அதேநேரம் முகாமில் இருந்து அந்நபர் தப்ப முற்பட்டதன் பின்னணி தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக